Monday, March 19, 2012

வன்னிய குல "உடையார்பாளையம் சமஸ்த்தானத்து அரசர்கள் "


வன்னிய குல "உடையார்பாளையம் சமஸ்த்தானது அரசர்கள்  " - "காலட்கள் தோழ உடையார்" என்ற பட்டமும் மற்றும் "கச்சி " என்னும் காஞ்சி பல்லவ மன்னர்களை குறிக்கும்  அடைமொழியையும் கொண்டு ஆட்சி செய்த வன்னிய மன்னர் பரம்பரையினர் .


உடையார் பாளையம் :

1 எழுதியவர் : டாக்டர் உ.வே.சாமிநாதையர்தட்டச்சியவர் : திருமதி கீதா சாம்பசிவம்
1.1 கோபால சாஸ்திரிகள்
1.2 ராமா சாஸ்திரிகள்
1.3 அறச் செயல்கள்


எழுதியவர் : டாக்டர் உ.வே.சாமிநாதையர்
தட்டச்சியவர் : திருமதி கீதா சாம்பசிவம்
===========================================================


தமிழ்நாட்டில் உள்ள பழைய ஜமீன்களுள் உடையார்பாளையம் ஒன்று. வீரத்திற்கும் தியாகத்திற்கும் கல்விக்கும் பெயர் பெற்ற பல ஜமீன் தார்கள் இதனை ஆண்டு இதற்கு நற்புகழை நாட்டியிருக்கிறார்கள். இதன் அதிபர்களாகிய 'காலாட்கள் தோழ உடையார்கள்' தங்கள் படைகளுடன் தங்கிய இடமாதலின் இதற்கு உடையார் பாளையம் என்னும் பெயருண்டாயிற்று.

தல வரலாறு



இவ்வூருக்குப் பத்ராரணியம், முற்கபுரி முதலிய பல பெயர்கள் உண்டு. இங்கே உள்ள சிவாலயம் மிகப் பழமையானது. ஸ்வாமியின் திருநாமம் வடமொழியில் முற்கபுரீசரெனவும் தமிழில் பயறனிநாதரெனவும் வழங்கும். அம்பிகையின் திருநாமம் நறுமலர்ப்பூங்குழல்நாயகி யென்பது; ஸுகந்தகுந்தளாம்பிகை யென்பது வடமொழி நாமம்.

மலைநாட்டின் கண் திவாகரபுரமென்னும் ஊரிலிருந்த வணிகனொ ருவன் சோழநாட்டிலும் பிறநாட்டிலும் மிளகுப்பொதிகளைப் பல மாடுக ளின் மேல் ஏற்றிக் கொணர்ந்து வியாபாரம் செய்து வந்தான். ஒரு சமயம் இவ்வூர் வழியாக விருத்தாசலத்திற்குப் போனான். அப்பொழுது இவ்வூரில் ஒரு சுங்கச் சாவடி இருந்தது.

மிளகிற்கு வரி அதிகமாக வாங்குவது வழக்கம். அதனை அறிந்த வணிகன் சுங்க அதிகாரிகளிடம் 'பொதிமூட்டையிலிருப்பது பயறு' என்று பொய் கூறி அதற்குரிய சிறிது வரியை மட்டும் கொடுத்துவிட்டுச் சென்றான். விருத்தாசலம் சென்று பொதியை அவிழ்க்கும்போது எல்லாம் பயறாக இருந்தது. அதிக விலைபெற்ற மிளகெல்லாம் குறைந்த விலையுள்ள பயறாக மாறினதனால் வணிகன் வருந்தினான். 'இது நான் பொய் சொன்னதற்காக இறைவன் செய்த தண்டனை போலும்' என்றெண்ணி பழமலைநாதர் முன் போய் முறையிட்டான். அப்போது, "கெட்ட இடத்தில் தேடவேண்டும்" என்று ஓர் அசரீரி வாக்கு உண்டாயிற்று.

உடனே அவ்வணிகன் இந்தத் தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டுப் பிரார்த்தித்தான். இறைவனருளால் பயறெல்லாம் மீண்டும் மிளகாயின. மிளகைப் பயறாகச் செய்த காரணம் பற்றிச் சிவ பிரானுக்குப் பயறணிநாதர் என்னும் திருநாமமும், இவ்வூருக்குப் பயறணீச்சுரம், முற்கபுரி என்னும் திருநாமங்களும் உண்டாயின. இத்தல வரலாற்றை என்னுடைய ஆசிரியராகிய மகாவித்துவான் ஸ்ரீமீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் தாம் இயற்றிய மாயூர புராணத்தில்,

"மன்னன் முதல் வானரெலாம் வந்து தொழ வரங்கொடுத்து
முன்னவனெக் காலுமமர் முற்கபுரம்"
(திருநாட்டு. 58)

எனக் குறிப்பித்திருக்கிறார்கள்.

இத்தலத்திற்குத் தமிழ்ச்செய்யுள் வடிவத்தில் ஒரு புராணமும் அம்பிகை விஷயமாக ஒரு மாலையும் உண்டு.

இங்கே காண்டீப தீர்த்தம் என்ற ஒரு பெரிய தீர்த்தம் இருக்கிறது. அத்தீர்த்தம் அருச்சுனனுடைய காண்டீபத்தால் உண்டாக்கப் பட்டதென்பர்; அருச்சுனனுக்குக் காண்டீபத்தை வளைத்துக் கொடுத்த ருளியமையின் இத்தலத்து விநாயகருக்கு வில் வளைத்த பிள்ளையா ரென்னும் திருநாமம் உண்டாயிற்று. அதற்கு அறிகுறியாக அம்மூர்த்தி யின் திருக்கரத்தில் இப்பொழுதும் ஒரு வில் இருக்கிறது. காண்டீப தீர்த்தத்தின் தென்கரையில் திருவாவடுதுறையாதீனத்திற்குரிய ஒரு மடமும் வடகரையில் தருமபுர ஆதினத்திற்குரிய மடம் ஒன்றும் இருக்கின்றன. இன்னும் பல மடங்கள் இத்தீர்த்தத்தைச் சுற்றி இருந்தி ருக்கவேண்டுமென்று தோற்றுகின்றது.

இவ்வூரில் விஷ்ணுவாலயம் ஒன்று உண்டு; அதில் பிரஸன்ன வேங்க டேசப் பெருமாளென்னும் திருநாமத்துடன் திருமால் எழுந்தருளியிருக் கிறார். பிறநாட்டார் தமிழ்நாட்டுக்கு வந்து போர் புரிந்த 'கலாப' காலத் தில் இங்கே இருந்த ஜமீன்தார்களுடைய பாதுகாவலில் பிற தலங்களி லிருந்த மூர்த்திகள் கொணர்ந்து வைக்கப்பட்டன. அக் காலத்தில் அம்மூர்த்திகள் எழுந்தருளியிருப்பதற்கு அமைக்கப்பட்ட மண்டபங்கள் இன்னும் அவ்வம்மூர்த்திகளின் பெயராலேயே வழங்கி வருகின்றன.

ஜமீன்தார்கள்

இவ்வூரிலுள்ள ஜமீன்தார்கள் கச்சியென்னும் அடைமொழியையுடைய பெயரையும் காலாட்கள் தோழ உடையாரென்னும் பட்டப்பெயரையும் உடையவர்கள். இவர்களுடைய முன்னோர்கள் காஞ்சீபுரத்தில் பாளை யக்காரகளாக இருந்தவர்களாதலின் கச்சி என்னும் அடைமொழி இவர்க ளுடைய பெயர்களுக்கு முன் சேர்த்து வழங்கப்படுகிறது. பல வீரர்களுக் குத் தலைவர்களாகி விஜயநகரத்தரசர்களுக்கும் மற்றவர்களுக்கும் போரில் துணை புரிந்து வந்தவர்களாதலின் "காலாட்கள் தோழ உடையார்" என்னும் பட்டப்பெயர் இவர்களுக்கு ஏற்பட்டது. இது காலாட் களுக்குத் தோழராகிய உடையாரென விரியும். இத்தொடர், "காலாக்கித் தோழ உடையார்" , "காலாக்கி தோழ உடையார்" எனப் பலவாறாக மருவி வழங்கும்.

பள்ளிகொண்ட ரங்கப்ப உடையார்

விஜயநகரத்தில் அரசாட்சி செய்த வீர நரஸிம்ம ராயரென்னும் அரசரு டைய காலத்தில் காஞ்சீபுரத்தில் இருந்து பாளையகாரராகப் பள்ளி கொண்ட ரங்கப்ப உடையாரென்பவர் ஆண்டு வந்தார். விஜய நகரத் தரசரின் ஆளூகைக்குட்பட்ட செஞ்சியில் அப்பொழுது அவ்வரசர் பிரதிநிதியாக ஆண்டு வந்த உதயகிரி, ராமபத்ரநாயக்க ரென்பவருக்குப் பள்ளி கொண்ட ரங்கப்ப உடையார் பலவகையில் உதவி புரிந்தார். வட நாட்டிலிருந்து போர் புரிய வந்த 'பரீத் ஷா' என்னும் மஹம்மதிய அரசரோடு நடந்த போரில் விஜயநகரத்தரசருடைய சார்பில் இருந்து படைத்தலைமை தாங்கி வெற்றி பெற்றார். அதனால் விஜயநகரத்தரசர் மகிழ்ந்து அவருக்குப் பல விருதுகளையும் ஊர்களையும் வழங்கினார். பன்னிரண்டு யானைகளையும், இருநூறு குதிரைகளையும், ஐயாயிரம் போர்வீரர்களையும் அளித்தார். அவர் பெற்ற பட்டங்களில் 'காஞ்சீபுரப் புரவலன்' என்பது ஒன்று. உடையார் பின்னும் பலவகையில் விஜய நகரத்தாருக்கு உதவி செய்து பலவகை ஊதியங்களைப் பெற்றார். காஞ்சீபுரத்தில் தம்முடைய உறவினரொருவரை வைத்துவிட்டுப் புதிதாக அரக்குடி என்னும் ஓரூரை உண்டாக்கி அதில் இருந்து ஆண்டு வந்தார்.

சின்ன நல்லப்ப உடையார்

பள்ளிகொண்ட ரங்கப்ப உடையாருக்குப் பின் அவருடைய மூத்தகுமாரர் பெரிய நல்லப்ப உடையார் பாளையக்காரரானார்; அவருக்குப் பிறகு அவர் தம்பியான சின்ன நல்லப்பக் காலாட்கள் தோழ உடையார் தலை வரானார். அவர் சிதம்பரம் ஸ்ரீநடராஜப்பெருமான் பால் இடையறாத அன்பு பூண்டவர்; பலவகையான தர்மங்கள் புரிந்தவர்; தமிழ் இலக்கண இலக்கியங்களில் நல்ல பயிற்சி உடையவர்; சிதம்பரத்தில் இருந்த குரு நமச்சிவாயரென்னும் பெரியோரிடம் உபதேசம் பெற்றவர். குருநமச் சிவாயருக்கு அவரிடம் பேரருள் இருந்து வந்தது.

(வெண்பா)
எல்லாச் சிறப்பும் இனிதாப் பொருந்துகின்ற
நல்லானெனப் பெயர்கொள் நாயகமே-சல்லாப
இந்திரன் போல் மிக்க செல்வம் இத்தரணிமீதிலுற்றுச்
சந்ததமும் வாழ்குவை நீதான்"

"நல்லானெனச் சொல்லும் நாயகசிரோமணியே!
தில்லைக்கடவுள் திருவருளால்-எல்லவரும்
மெச்ச வளர்செல்வம் மேன்மேலுமேய்டைந்தே
இச்சையுடன் வாழ்ந்துண்டிரு"

"பாவிலருந்தமிழைப் பாராட்டி யெப்பொழுதும்
மேவ சிவபூசை வேளையினும்- தான பிறப்
பில்லாத பொற்சபையில் ஈசனையும் கச்சிவரு
நல்லானையுமறவேன் நான்"


என்ற குருநமச்சிவாயர் பாடல்களால் சின்ன நல்லப்ப உடையருடைய இயல்பும் அவர்பால் குருநமச்சிவாயருக்கு இருந்த அருளும் விளங்கும். சின்ன நல்லப்ப உடையாரும் தம் குருவைப் பாராட்டிய செய்யுட்கள் பல. அவற்றுள் இரண்டு வருமாறு;

(வெண்பா)

1. நன்னூலுங்காரிகையும் நன்றாந்திவாகரமும்
பன்னூலும் ஆராய்ந்து பார்ப்பதேந்முன்னூலும்
கொண்டாடும் தில்லைக்குரு நமச்சிவாயர்முகம்
கண்டாலும் உண்டே கதி."

2. கீதம் பாதங்கிளிருங் கலைஞானம்
வேதம் பரிமளிக்க வீசுமே -கீதக்
கொழுந்திருக்கும் தில்லைக்குரு நமச்சிவாய
தழைந்திருக்குமாத்தானந்தான்."


நடராஜப் பெருமானுடைய திருத்தொண்டில் ஈடுபட்ட சின்ன நல்லப்ப உடையார் அம்மூர்த்தியை மனமுருகித் துதித்த செய்யுட்கள் பல. அவற்றுள் ஒன்று வருமாறு:

(வெண்பா)

அம்பலவா பின்னொருகால் ஆடினாற்றாழ்வாமோ
உம்பரெலாது கண்டதெனக் கொப்பாமே-சம்புவே
வெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புவிக்குந் தித்தியென
ஒற்றிப் பதஞ்சலிக்கு மோ."


அங்ஙனம் அவர் இயற்றிய செய்யுட்கள் மிகச் சிறந்தனவாக இருந்தனவென்பது,
(வெண்பா)
2சேவிலுயரம்பலவர் சேவடிக்குச் செந்தமிழாப்
பாவிலுயுர் பூணாப் பலித்தவே-வாவிதொறும்
சேலாக்கள் மேலிடறுந் தென்கச்சிச் சின்ன நல்ல
காலாக்கள் தோழன் கவி."

என்பதனாற் புலப்படும்.

அவர் காலாட்கள் தோழபுரம் என்னும் ஓர் அக்ரஹாரத்தை நிறுவினார்.

அவர் நல்ல ஞானியாதலின் க்ஷேத்திரயாத்திரை செய்துவரவேண்டு மென்னும் அவாவுடையரானார். உடனே சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜ மூர்த்தியைத் தரிசித்துத் தம் குருவை வணங்கி விடைபெற்றுப் புறப்பட்டார். வேதாரணியம் போக எண்ணி வருகையில் இடையில் ஒரு சிறு சிவாலயத்தையும் அதன ருகில் ஒரு தடாகத்தையும் கண்டார். அன்று மாலை சிவதரிசனம் செய்துவிட்டு இரவில் அங்கேயே தங்கினார். அவர் உறங்குகையில் அவருடைய கனவில் சிவபெருமான் ஒரு பெரியவராகி எழுந்தருளி அந்த இடத்தை இராசதானியாக்கிக் கொண்டால் மேன்மேலும் எல்லா நலங்களும் வளருமென்று கட்டளை யிட்டார்.


உடையார் பாளையம்:
விடியற்காலையில் எழுந்த சின்ன நல்லப்ப உடையார் சிவபிரானது கருணைத் திறத்தை நினைத்து உள்ளங்குழைந்து போற்றினார். ஆலயத்துக்கு அருகில் வசித்திருந்தவர்களிடமிருந்து அவ்வாலயம் முற்கபுரீசருடையதென்றும் அத்தீர்த்தம் காண்டீப தீர்த்தமென்றும் அறிந்தார். பின்னும் தலமகிமையை நன்றாகத் தெரிந்து கொண்டார். சிவபிரானுடைய கட்டளைப்படி அவ்வூரில் பெரிய அரண்மனையைக் கட்டுவித்துத் தமக்குரிய படைகளை அங்கே வருவித்தனர். தமக்கு எல்லா நலங்களையும் தருவது சிவபிரான் திருவருளே என எண்ணி முற்கபுரீசர் ஆலயத்தையும் விரிவுற இயற்றுவித்துப் பல வீதிகளையும் நிருமித்து நித்திய நைமித்திகங்கள் சிறப்புற நடக்கும்படி நிவந்தம் அமைத்தனர். அவர் அமைத்துக்கொண்ட அவ்விராசதானியே இந்த உடையார் பாளையமாகும்.

முற்கபுரியென்னும் பெயரால் வழங்கிவந்த இத்தலம் சின்ன நல்லப்ப உடையார் இராசதானியாக்கிக் கொண்ட பின்பு உடையார் பாளையம் என வழங்கிவரலாயிற்று. அறநெறியும் தவநெறியும் வழாமல் அரசு புரிந்து வந்த அவர் அளவிறந்த தருமங்கள் செய்தனர். குரு நமச்சிவாயருடைய கட்டளையின்படி சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு உச்சிக்காலக் கட்டளை நடைபெறும் வண்ணம் இளங்கம்பூரென்னும் கிராமத்தை மானியமாக அளித்தனர்' இச்செய்தி,

(எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்)

"தென்னருணை மருவுகுகை நமச்சிவாய
தேவனருள் குருநமச்சிவாய தேவன்
மன்னுபுகழ்ப் புலியூரம் பலத்தில் வாழும்
வள்ளலுச்சிக்காலக்கட்டளைக்கு வாய்ப்ப
இந்நிலமெலாம் புகழுமரசூர்ப் பற்றின்
இளங்கம்பூர்ச் சாதனக்கல் எழுதி நாட்டி
நன்னெறி சேர் காலாட்கள் தோழன் சின்ன
நல்லானென்றிடு துரையே நடாத்தினானே."


என்னும் செய்யுளாற்புலப்படும். அவருடைய உருவம் சிதம்பரம் குரு நமச்சிவாயர் மடத்தைச் சார்ந்த தடாகத்தின் கரையில் சிலையில் அமைக்கப் பட்டிருக்கின்றது. இறைவனிடம் 'இடையீடில்லாத அன்பும், மெய்யுணர்வும், கொடைவளமும், தமிழறிவும் வாய்ந்த இந்தச் சின்ன நல்லப்ப உடையாரே உடையார் பாளையம் ஸமஸ்தானத்தை நிறுவியர். பலவகையிலும் அவர் சிறப்புற்று வாழ்ந்து வந்தார்.

உடையார் பாளையம் பின் வந்தவர்கள்
அவருக்குப் பின்பு பல ஜமீன்தார்கள் ஆட்சி புரிந்து வந்தனர். அவர்கள் உடையார் பாளையத்தைச் சூழ்ந்துள்ள காடுகளை அழித்து வளப் படுத்தினர். அதனால் அவர்களுடைய வருவாய் அதிகமாயிற்று. உடையார் பாளையத்தையும் நன்னகராக அமைத்தனர். புலவர்களையும் தம்பால் அடைக்கலம் புகுந் தோரையும் ஆதரித்தனர். பலவகையான அறங்களைச் செய்தனர். சிவ விஷ்ணு ஆலயங்கள் பலவற்றைப் புதுப்பித்து அங்கங்கே பல திருப்பணிகள் செய்வித்துக் கட்டளைகளும் நடைபெறச் செய்தனர். அஞ்சினா ருக்கு அடைக்கலத்தானமாகவும் வித்துவான்களுக்குத் தாய்வீடாகவும் வீரர்களுக்கு இருப்பிடமாகவும் உடையார் பாளையம் விளங்கி வந்தது.

மன்னார்குடி, ஸ்ரீமுஷ்ணம், திருப்பனந்தாள், கங்கைகொண்டசோழபுரம், குருகைகாவலப்பன் கோயில் முதலிய பல தலங்களில் பலவகைத் திருப்பணிகள் அவர்களாற் செய்விக்கப் பட்டன. கங்கைகொண்ட சோழ புரத்தில் உள்ள சிவாலயத்தில் ஒரு சிங்கக் கிணறு இருக்கிறது. அதிலுள்ள ஒரு சிறுகல்லில் 'காலாட்கள் தோழ உடையார் தர்மம்' என்று எழுதப் பட்டிருக்கிறதென்பர்.

வேங்கடப்ப உடையாரென்பவர் காலத்தில் இங்கே நாணயங்கள் அச்சிடப் பட்டு 'உடையார்பாளையும் புதுப்பணம்' என்று வழங்கி வந்தன வாம். இப்பொழுது கூட உடையார் பாளையத்தில் சில பழைய நாண யங்கள் அகப்படுகின்றனவென்பர்.

நல்லப்ப உடையாரென்னும் ஜமீன்தார் பல அரசர்களுக்கு அடைக் கலங்கொடுத்துப் பாதுகாத்து வந்தார். அவர் காலத்தில்தான் மஹமதிய அரசர்களின் படையெழுச்சியினால் காஞ்சீபுரத்திலுள்ள ஸ்ரீ ஏகாம்ப ரேசுவரர், ஸ்ரீகாமாட்சியம்பிகை, ஸ்ரீவரதராஜர் முதலிய மூர்த்திகள் உடையார் பாளையத்திற்கு எழுந்தருளுவிக்கப் பெற்றன. உடையார் பாளையத்திற்குச் சென்றால் அச்சமின்றி இருக்கலாமென்ற நம்பிக்கை யாவருக்கும் இருந்து வந்தது. பிற தலங்களிலிருந்து கொணரப்பட்ட மூர்த்திகளுக்கு ஒரு குறைவுமின்றி நித்திய நைமித்திகங்கள் ஜமீன் தாரால் நடத்துவிக்கப் பெற்றன. அந்த மூர்த்திகள் எழுந்தருளி யிருந்த மண்டபங்கள் அவ்வம் மூர்த்திகளின் பெயராலேயே வழங்கி வரலாயின. அக்காலத்தில் உடையார் பாளையமே காஞ்சீபுரமாக விளங்கிவந்தது. புலவர்களெல்லாம் நல்லப்ப உடையாரைப் பாமாலை சூட்டிப் புகழ்ந்த னர். அவர் அக்காலத்தில் 'ஈஸ்டு இந்தியா கம்பெனி'யாருக்கு உதவி புரிந்து அவர்களிடமிருந்து யானைகளையும் சில கிராமங்களையும் பெற்றனர்.

ரங்கப்ப உடையாரென்னும் ஒருவர் ஷோடச மகாதானங்கள் செய்தார். அதற்கு மூன்று லக்ஷம் பொன் செலவாயின. அவர் வடமொழியிலும் தென்மொழியிலும் நல்ல பயிற்சி உடையவர்; ஞானநூல்களை நன்கு பயின்றவர்; சீலம் உடையவர். அவரை இரு மொழிப்புலவர்களும் பல படப் பாராட்டிப் புகழ்ந்தி ருக்கின்றனர். அவர் தூயவாழ்வும் தவ ஒழுக்க மும் உடையவராகி இருந்தனர். பற்றற்ற மனம் உடையாராய் எப்பொ ழுதும் துறவியைப் போன்ற ஒழுக்கத்தை மேற்கொண்டு விளங்கினார். அதனால் அவரை யாவரும் 'ராஜரிஷி' என்று அழைத்து வந்தனர். அவர் காலத்தில் உடையார்பாளையம் ஞானபூமியாக விளங்கிற்று. அவர் அரசாண்டு வருகையில் சகவருஷம் 1632-இல் காஞ்சீபுரத்திலிருந்து எழுந்தருளியிருந்த மூர்த்திகளுள் ஸ்ரீஏகாம்பரேசுவரரும், ஸ்ரீவரதராஜப் பெருமாளும் மீண்டும் காஞ்சீ புரத்திற்கு எழுந்தருளுவிக்கப் பட்டனர். காமாட்சியம்பிகையின் ஸ்வர்ண விக்கிரஹம் மட்டும் இவ்வூரிலேயே இருந்ததாகத் தெரிய வருகிறது. அவர் ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோயிலில் ஆஸ்தான மண்டபமும் கல்யாண மண்டபமும் கட்டு வித்தார்; பூஜை முதலிய வற்றிற்காகச் சில கிராமங்களை மானியமாக அளித்தார். சில சிவாலயங்களிலும் திருப்பணிகளைச் செய்வித்து இறையிலி நிலங்களையும் கிராமங்களையும் வழங்கினார்.

ஜனக மஹாராஜரைப் போல் அரசாட்சி மிகச் செவ்வையாக நடை பெறும்படி செய்து உள்ளத்தே பற்றில் லாமல் வாழ்ந்து வந்தாலும் ரங்கப்பக் காலாட்கள் தோழ உடையாருக்கு எல்லா வியவஹாரங்களையும் விட்டுவிட்டு 'வரம்பறு திருவினை மருவும் அருத்தி' உண்டா யிற்று. அவருடைய குமாரராகிய யுவரங்கப்ப உடையார் 'மகனறிவு தந்தையறிவு' என்பதற்கேற்ப இளமையிலே அறிவும் அன்பும் சீலமும் உடையவராக விளங்கினார். அதனையறிந்த ரங்கப்ப உடையார் மகிழ்ந்து அவருக்கே தம்முடைய பட்டத்தையளித்து அரசியற்பாரத்தை அவரிடம் ஒப்பித்துவிட்டு இறைவன் திருவடிக்கண் உள்ளத்தை ஒடுக்கித் தவம் செய்யலானார்.

யுவரங்க பூபதி

எந்தக் காலத்திலும் வித்துவான்களுடைய ஸமூகத்தில் அடிக்கடி புகழப்படும் உபகாரிகள் சிலர் உண்டு. தமிழ் நாட்டில் எத்தனையோ அரசர்களும் பிரபுக்களும் பிறரும் புலவர்களை ஆதரித்து வந்திருக் கிறார்கள். அவர்களெல்லோருடைய புகழும் பரவி யிருந்தாலும் சிலருடைய புகழ்களே பல சமயங்களில் ஸபை களில் எடுத்துச் செல்லப் படுகின்றன. அத்தகையவருடைய நற்செயல்கள் புலவர்கள் பேச்சுக்களுக்கு இடையே அடிக்கடி பாராட்டப் பெறுகின்றன.

அத்தகைய பெருமை வாய்ந்தவர்களுள் யுவரங்க பூபதியும் ஒருவர். 'யுவரங்கன் இப்படிச் செய்தான், யுவரங்கன் செய்ததைக் கேட்டீர்களா?" என்று வித்துவான்கள் சந்தோஷத்துடன் தம்முள் சொல்லிக் கொள்ளும் வரலாறுகள் பல உண்டு. அவருடைய அருமைச் செயல்கள் இன்றளவும் பலராலும் பாராட்டப் படுகின்றன. அவரினும் பெரிய செல்வ நிலையில் இருந்தவர்களைப் பற்றிச் சொல்லும்பொழுது கூட அவரை உவமையாக எடுத்துக் கூறுவதை வித்துவான்கள்பாற் கேட்கலாம்.

உடையார்பாளையத்தில் இருந்த ஜமீன்தார்களுள் யுவரங்கருடைய புகழ் மற்ற எல்லோருடைய புகழிலும் மேற்பட்டு விளங்குகின்றது.

'மன்புகழ் பெருமை நுங்கள்
மரபினோர் புகழ்கள் எல்லாம்
உன்புகழ் ஆக்கிக்கொண்டாய்
உயர்குணத் துரவுத்தோளாய்"


என்று பரதனைப் பற்றிக் குகன் கூறியதாகக் கம்பர் சொல்லியிருப்பது யுவரங்கருடைய விஷயத்திலும் பொருத்தமுடையதென்று தோற்றுகிறது.

ரங்கப்பர் என்பது அவருடைய இயற்பெயர்; தம்முடைய தந்தையார் காலத்திலேயே ஜமீன் ஆட்சியைப் பெற்று யுவராஜாவாக இருந்தவராத லின் அவர் 'யுவரங்கப்பக் காலாட்கள் தோழ உடையார்' என்று வழங் கப்பட்டார். அவர் பதினெட்டு வருஷங்களே ஆண்டு வந்தனரென்று தெரிகிறது.

அருங்கலை விநோதராகிய அவர் தமிழிற் புலமையுடையவராக இருந்தார். வடமொழியிலும் அவருக்குப் பயிற்சி இருந்தது. ஸங்கீதத் தில் மிக்க பழக்கம் அவருக்கு உண்டென்று தெரிய வருகிறது. எப்பொழுதும் வித்துவான்களுக்கு இடையில் இருந்து அவர்களுடைய அறிவையும் ஆற்றல்களையும் அறிந்து இன்புறுவதையே பொழுது போக்காகக் கொண்டிருந்தார். அக்காலத்தில் இருந்த வடமொழி தென் மொழி வித்துவான்களிற் பெரும்பான்மையோரும் ஸங்கீத வித்துவான் களிற் பலரும் யுவரங்கர்பால் வந்து வந்து தம்முடைய கலைத் திறத்தைக் காட்டிப் பரிசு பெற்றுச் செல்லுதலையே ஒரு நன்மதிப்பாகக் கருதி வந்தனர்.

உடையார்பாளையத்திற்கு வித்துவான்கள் வந்தால் யுவரங்கருடைய உத்தரவுப்படி அரண்மனை உத்தியோகஸ்தர்கள் அவர்களை உபசரித்து அவர்கள் தங்குவதற்குரிய தக்க இடங்களை அமைத்துக் கொடுப்பார்கள். அவர்களுக்கு வேண்டிய பொருள்கள் அவ்வவ்விடங்களில் அமைக்கப்படும். வேலை யாட்கள் அவர்கள் விருப்பத்தின்படி எந்தச் சமயத்தில் எது வேண்டுமோ அதைச் செய்யும் பொருட்டு அவ்வவ்விடங்களில் காத்திருப்பார்கள். வித்துவான்கள் ஸந்தோஷமாக இருக்கும்பொழுது யுவரங்கர் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வலிய வந்து கண்டு ஸல்லாபம் செய்துவிட்டுப் போவார். இங்ஙனம் வந்து பழகும் இயல்பு யுவரங்கருக்கு ஒரு தனிப்புகழை உண்டாக்கியது. தங்கள் வித்தையை அறிந்து அளிக்கும் பரிசு சிறிதாயினும் சிறந்ததாகக் கொள்வது வித்துவான்களின் இயல்பு; ஆதலின் யுவரங்கருடைய வரிசை யறியும் திறனை அறிந்த வித்துவான்கள் அவராற்பெறும் பரிசுகளை மிகச் சிறந்தனவாகவே மதித்து வந்தனர்.
கோபால சாஸ்திரிகள்

வடமொழி வித்துவான்களிற் பலர் யுவரங்கரைப் பலவகையாகப் புகழ்ந்திருக்கின்றனர். அவருடைய ஆஸ்தான பண்டிதராகக் கோபால சாஸ்திரிகள் என்ற சிறந்த வித்துவான் ஒருவர் இருந்தார். அவருடைய கவிகள் மிகவும் இனிமையுடையனவாக இருக்கும். 'அபிநவ காளி தாஸர்' என்னும் பட்டம் அவருக்கு யுவரங்கரால் வழங்கப்பட்டது. யுவரங்கர் அவரை எந்தக் காலத்திலும் தம்முடன் இருக்கும்படி செய்தனர்; எங்கே போனாலும் அவரை உடனழைத்துச் செல்வார். அந்த அந்தச் சமயங்களுக்கு ஏற்றவாறு தம்முடைய கவி சாதுரியத்தாலும் சொல்லினிமையாலும் யுவரங்கரை அந்த வித்துவான் மகிழ்ச்சியுறச் செய்து வருவார். இருவரும் ஒருவரையொருவர் விட்டுப் பிரியார்.

ஒருமுறை யுவரங்கர் வேட்டையாடச் சென்றார். கோபால சாஸ்திரி களும் உடன் சென்றனர். ஒரு காட்டின் நடுவில் ஓர் ஐயனார் கோவில் இருந்தது. அதில் இருந்த விக்கிரகம், வலக்கைச் சுட்டு விரலை மூக்கின் மேல் வைத்த நிலையில் இருந்தது. அதைக் கண்ட யுவரங்கர், "இந்த ஐயனார் மூக்கில் விரல் வைத்துக் கொண்டிருப்பதற்கு ஒரு காரணத்தைக் கற்பித்துச் சொல்லவேண்டும்" என்றார். உடனே சாஸ்திரிகள், 'நமக்கோ ஹரிஹர புத்திரனென்னும் பெயர் இருக்கிறது. நம்முடைய தந்தையார் பரமசிவன. தாயாரோ மோகினியாகிய விஷ்ணு. அவர் திருமகளாகிய தேவியரை மணந்து புருஷோத்தமரென்ற கெளரவத் துடன் வாழ்கின்றார். அவரை நாம் தாயாரென்று அழைப்பதா? தந்தை யாரென்று அழைப்பதா? இப்படிப்பட்ட நிலையில் இருக்கிறோமே! என்ன செய்வது?' என்று வியப்புடன் ஆழ்ந்த ஆலோசனை செய்கிறாரென்னும் கருத்தை அமைத்து ஒரு சுலோகம் சொன்னார். கேட்ட யுவரங்கர், "ஐயனார் ஆழ்ந்து ஆலோசிப்பதாக அமைத்த இந்தச் சுலோகம் சிறிதும் ஆலோசனை பண்ணாமல் விரைவிற் சொல்லப் பட்டது எனக்கு வியப்பாக இருக்கிறது" என்று கூறி அந்தக் கருத்தின் பொருத்தத்தை உணர்ந்து பாராட்டினார். 1

அயல்நாட்டு அரசர்களால் அடிக்கடி நேர்ந்த கலகங்களுக்கு அஞ்சி உடையார்பாளையத்திலும் வேறு பாதுகாப்புள்ள இடங்களிலும் எழுந்தருளச் செய்து வைக்கப்பட்ட மூர்த்திகளுக்கு உரிய பூஜை முதலியன யுவரங்கருடைய காலத்தில் குறைவின்றிச் செவ்வையாக நடைபெற்று வந்தன. அந்த அந்த மூர்த்திக ளுக்கு உரிய ஸ்தலங்களில் இருக்கும் பொழுது எங்ஙனம் நித்திய நைமித்திகங்கள் நடைபெற்று வருமோ அங்ஙனமே அக்காலத்திலும் நடைபெற்று வரும்படி அவர் செய்து வந்தார். அங்ஙனம் நடைபெறுகின் றனவா என்பதை அங்கங்கே ஒற்றர் களை வைத்து அறிந்தும் தாமே மாறு வேடம் பூண்டு ஒருவரும் அறியாமற் சென்று பார்த்தும் வருதல் அவருடைய வழக்கமாக இருந்தது.

ருநாள் இரவு அவர் கோபால சாஸ்திரிகளுடன் திருவாரூர் சென்று கோயிலை அடைந்து ஸ்ரீவன்மீகநாதர் முதலிய மூர்த்திகளைத் தரிசனம் செய்தார். அங்கே அவ்வாலயத்தில் மேற்குப் பிராகாரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தியாகராஜமூர்த்தியோடு சிதம்பரம் ஸ்ரீ நடராஜ மூர்த்தியும் பாதுகாப்புக்காக எழுந்தருளச் செய்யப் பாட்டிருந்தார். அதனால் அந்த மண்டபம் இன்றும் நடராஜ மண்டபம் என்னும் பெயரால் வழங்கும்.

ஸ்ரீநடராஜ மூர்த்தியையும் ஸ்ரீதியாகராஜ மூர்த்தியையும் ஒருங்கே தரிசித்த யுவரங்கர் பேரன்பினால் மனமுருகி நின்றார்; அருகில் நின்ற சாஸ்திரிகளைப் பார்த்து, "இந்த இரண்டு ராஜாக்களும் சேர்ந்து இங்கே இருப்பதைப் பற்றி ஒரு சுலோகம் சொல்லவேண்டும்," என்று கேட்டுக் கொண்டார். அவர் உடனே, நடராஜ மூர்த்தி தியாகராஜ மூர்த்திக்குரிய இடத்தில் வந்தெழுந்தருளி யிருப்பதைக் குறிப்பித்து, " 96 அடிக்கம்பத் திற்கு மேல் ஆகாசத்தில் ஆடினாலும் பூமியில் வந்துதான் தானம் வாங்கவேண்டும்" என்று சமத்காரமான ஒரு கருத்தை அமைத்து ஒரு சுலோகத்தைச் சொன்னார். ஸ்ரீநடராஜப் பெருமான் 96 தத்துவங்களுக்கும் மேலே விளங்குபவரென்பது சிதம்பரம் ஆகாசஸ்தலமென்பதும் திருவா ரூர் பிருதிவிஸ்தலமென்பதும் தியாகராஜ மூர்த்தி வள்ளலென்பதும் பிறவுமாகிய விரிந்த செய்தி களைச் சுருக்கமாகப் புலப்படும்படி உலக வழக்கம் ஒன்றோடு பொருத்திக் காட்டிச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வாறு சாஸ்திரிகள் கூறிய சுலோகத் தைக் கேட்ட யுவரங்கர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை; "உங்களுடைய பழக்கத்தைப் பெறுவ தற்கு நான் எவ்வளவோ தவம் செய்திருக்க வேண்டும்" என்று மனங் குளிர்ந்து பாராட்டினார்.

ஒருமுறை கோபால சாஸ்திரிகள் ஒரு சமஸ்தானத்து அரசர் விருப்பப் படி அவர்பாற் சென்று கண்டார். பலநாளாகச் சாஸ்திரிகளுடைய கல்விப் பெருமையைக் கேள்வியுற்ற அவ்வரசர் கோபால சாஸ்திரி களைப் பாராட்டிப் பலவகைப் பரிசுகளை வழங்கினார். அவற்றைக் கண்ட அந்த ஸமஸ்தானத்து வித்து வான்களிற் சிலர், "யுவரங்கரிடம் இவர் எவ்வளவோ ஸம்மானம் பெற்றிருக்கலாம். ஆனாலும் இங்கே பெற்றதைப் போல இராது" என்று தம்முள் பேசிக்கொண்டிருந்தார்கள். அது கோபால சாஸ்திரிகள் காதிற்கு எட்டியது.

அவர் மிகவும் தைரியசாலி. 'வித்துவான்களுடைய இங்கிதமறிந்தும் வரிசையறிந்தும் ஸம்மானம் செய்யும் யுவரங்கர் எங்கே? இவரெங்கே' என எண்ணினார். உடனே 1* அஜ்ஞாநாம்' எனத் தொடங்கும் ஒரு சுலோகத்தைக் கூறினார். அதில் அறிவில்லாத அரசர்கள் நாள்தோறும் செய்யும் கனகாபிஷேகத்தைக் காட்டிலும் ஸ்ரீயுவரங்க பூபதியின் ஒரு சிரக்கம்பமே மேலானது என்னும் கருத்தும் அதற்குரிய உவமானமும் அமைந்திருந்தன. வித்தியா வீரராகிய சாஸ்திரிகள் உடனே விடை பெற்றுக் கொண்டு உடையார்பாளையம் வந்துவிட்டார். அவருடைய மனத்துணிவையும் யுவரங்கர்பால் அவருக்கிருந்த அன்பையும் இச்செயலால் எல்லோரும் அறிந்து அவரை மிகப் பாராட்டினர்.2*
ராமா சாஸ்திரிகள்

கோபால சாஸ்திரிகளின் குரு கோழிமங்கலம் ராமா சாஸ்திரிக ளென்பர். அவர் கோபால சாஸ்திரிகளைப் போன்ற பலருக்குப் பாடஞ் சொன்ன பெருமை வாய்ந்தவர்; சாஸ்திரங்களெல்லாவற்றிலும் பயிற்சி யுடையவர். வீட்டில் இருந்து அநுஷ்டானங்களைச் செய்வதும், நூல் களை வாசிப்பதும், பாடஞ் சொல்வது மாகிய காரியங்களை மட்டும் செய்து பொழுது போக்கிக்கொண்டு வந்தார். யாரையும் போய்ப் பார்த்துப் பொருளுதவி பெறும் வழக்கம் அவரிடம் இல்லை; அதில் வெறுப்பும் இருந்தது. மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வந்தார். மற்ற வித்து வான்களெல்லாம் பல சம்ஸ்தானங்களுக்குச் சென்று ஸம்மானங் களைப் பெற்று வருவதை அறிந்தும் அவருக்கு அங்ஙனம் போய்வருதலில் ஸம்மதம் இல்லை. சிஷ்யர்க ளெல்லாம் அவரைத் தெய்வமாக எண்ணி வழிபட்டு வந்தனர். மற்ற வித்துவான்களும் அவரிடத்தில் மரியாதையும் மதிப்பும் உடையவர்களாக இருந்தனர்; அவர்களுட் சிலர் ஸமஸ்தானங்களுக்குப் போனால் அவர் வித்தையைப் பலர் அறிய முடியுமென்றும் ஸம்மானம் பெறலாமென்றும் கூறுவதுண்டு. அவற்றை யெல்லாம் அவர் செவிக்கொள்ளவே இல்லை.


"நெடுந்தூரத்திலுள்ள இடங்களுக்குப் போகவேண்டாம். ஸமீபத்தில் இருக்கும் உடையார்பாளையம் ஜமீன்தாராக உள்ள யுவரங்கர் தாரதம்ய ஞானம் நிரம்பப் பெற்றவர். அங்கே நீங்கள் வந்தால் எங்களுக்கு அநுகூ லமாக இருக்கும்.' என்று அவருடைய சிஷ்யர்கள் சொல்லிப் பிரார்த் தித்தார்கள். பின்பு கோபால சாஸ்திரிகளும் அவர்பால் வந்து, "உங்களை ஜமீன்தார் தரிசனம் செய்து ஸல்லாபம் செய்யவேண்டு மென்று விரும்புகிறார். தாங்கள் அங்ஙனம் செய்தால் அவருக்கு எவ்வளவோ சந்தோஷமாக இருக்கும். என்னைப் போன்றவர்களுக்கும் நன்மை உண்டாகும்." என்றார். ராமா சாஸ்திரிகள், "நான் வந்தால் அவர் ஏதாவது கொடுப்பார்; இதுவரையில் நான் யாரிடத்தும் போனதுமில்லை; பிரதிக்ரஹம் வாங்கினதுமில்லை. இனிமேல் புதிதாக அந்த வழக்கத்தை வைத்துக்கொள்வது எதற்கு?" என்றார். அவருடைய நிராசையை நன்கு அறிந்த கோபால சாஸ்திரிகள் பலவகையாக அவருக்கு ஸமாதானம் கூறினார்; "நீங்கள் ஒன்றும் பெற்றுக் கொள்ள வேண்டாம்; தாம்பூலம் மட்டும் பெற்று வந்து விடலாம். உங்களுடைய தரிசனத்தை மாத்திரம் தந்துவிட்டு வந்தால் அவருடைய ஆசை தீர்ந்துவிடும். இந்தத் தேசத் தில் அவரைப் போன்ற ஸாரக்ராஹியையும் வித்வஜ்ஜன பரிபாலகரை யும் தாரதம்ய ஞானம் உடையவரையும் எங்கும் காண முடியாது" என்று சொன்னார். ராமா சாஸ்திரிகள் தாம்பூலம் மாத்திரம் பெற்றுக் கொள்வதாக நிபந்தனை கூறிவிட்டு உடையார்பாளையம் வர ஒருவாறு ஸம்மதித்தார்.

ஒருநாள் கோபால சாஸ்திரிகள் தம் குருவை உடையார் பாளையத்திற்கு அழைத்துச் சென்றார். ராமாசாஸ்திரிகள் கோபால சாஸ்திரிகள் சொல்லிக் கொடுத்தபடி ஒரு தேங்காயை எடுத்துச் சென்று ஒரு சுலோகம் சொல்லி யுவரங்கர் கையில் கொடுக்க நினைந்து தேங்கா யையும் மங்கள சுலோகத்தையும் ஸித்தப்படுத்திக்கொண்டார். அரண்மனையில் நுழைந்தவுடன் அவருக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. அங்கங்கே காவலாளர்கள் சட்டையணிந்து கையில் ஆயுதங்களோடு நிற்றலையும் அங்கே பழகுபவர்க ளெல்லாம் பயத்துடனும் மரியாதையுடனும் ஒழுகுவதையும் கண்டார். அத்தகைய காட்சிகளை அதற்கு முன் அவர் காணாதவர். பின்பு உள்ளே சென்று யுவரங்கருடைய ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார். கோபால சாஸ்திரிகள் அங்கே சென்றவுடன் யுவரங்கர்பால் அவரை அழைத்துச் சென்றார். அங்கே இருந்த காட்சியைக் கண்ட ராமா சாஸ்திரிகளுக்கு உடம்பெல்லாம் வேர்த்தது. அதுகாறும் அத்தகைய இடங்க ளுக்குச் சென்றவரல்லராதலின் மனத்திற்குச் திருப்தியில்லாத காரியம் ஒன்றை நிர்ப்பந்தத்திற்காகச் செய்ய ஒப்புக்கொண்டது பற்றி அவர் மனம் கலக்கமுற்றது. யாசகம் செய்தலைப் போன்ற ஒன்றைத் தாம் செய்யத் துணிந்துவிட்டதாக அவர் எண்ணிய கருத்தே அவரை அந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டது.

யுவரங்கர் அவர்களைக் கண்டு எழுந்து நின்றார். "இவர்கள் தாம் எங்கள் ஆசார்யர்கள்" என்று கோபால சாஸ்திரிகள் யுவரங்கரிடம் சொன்னார்.


"அப்படியா! தன்யனானேன்" என்று சொல்லிக்கொண்டே ஜமீன்தார் ராமா சாஸ்திரிகளைப் பார்த்தார். அவருடைய உடம்பு முழுவதும் வேர்த்திருப்பதையும் நடுங்குவதையும் கண்ட ஜமீன்தார் பேசினால் அவருக்குத் தைரியமுண்டாகுமென்று எண்ணி, "தங்கள் திருநாமத்தை நான் அறியலாமோ?" என்று கேட்டார்.


நடுங்கிக் கொண்டிருந்த சாஸ்திரிகளுக்குப் பேசமுடியவில்லை; கஷ்டப்பட்டு, "ராமாமங்கலம் கோழி சாஸ்திரிகள்" என்று சொன்னார். கோழிமங்கலம் ராமா சாஸ்திரிகள் என்று சொல்ல வந்தவர் அச்சத் தால் அப்படி மாற்றிச் சொல்லிவிட்டார். உடனே சுலோகத்தையும் சொல்லித் தேங்காயை யுவரங்கர் கையில் கொடுத்தார். கொடுக்கும் பொழுது கை நடுக்கத்தால் அவர் கையிற்படும்படி சரியாகக் கொடா மையால் அது தவறிக் கீழே விழுந்து உடைந்துவிட்டது.

பின்புதான் சாஸ்திரிகளுக்கு உணர்ச்சியும் தைரியமும் உண்டாயின. எவ்வளவோ பேர்கள் கூடியிருக்கிற ஓரிடத்தில் தாம் அங்ஙனம் நடந்துகொண்டது அநுசிதமென்றும் அவ்வளவு அதைர்யப் படுதல் கூடா தென்றும் எண்ணினார். தேங்காய் உடைந்தவுடன் அந்த ஒலியே அவருக்கு ஒரு துணிவை உண்டாக்கிற்று. உடனே தலைநிமிர்ந்து, "உங்களை உடையாரென்று சொல்வார்கள். ஆயினும் என்ன காரணத் தாலோ இது விழுந்து உடைந்துவிட்டது" என்று சொன்னார். அங்கே இருந்த யாவரும் அவரைக் கவனித்துக்கொண்டே இருந்தவர்களாதலின் அந்தச் சாதுர்யமான பேச்சைக் கேட்டு மகிழ்ந்தார்கள்.

பின்பு அவர் அங்கே யுவரங்கரோடு ஸல்லாபம் செய்துகொண்டு சில நாள் இருந்தார். யுவரங்கர் அவருடைய ஞான நிலையையும் மற்றவர் களால் அவர் மதிக்கப்பட்டிருத்தலையும் நன்றாக அறிந்து மகிழ்ந்தார். பிறகு, அவர் விடைபெற்றுக்கொள்கையில் தாம்பூலத்தை யன்றி வேறொன்றும் பெற்றுக்கொள்ளாமல் ஊர் சென்றார். அவருடைய நிராசையையும் பெருந்தன்மையையும் யுவரங்கர் பாராட்டினார்.

நறுமலர்ப்பூங்குழல் நாயகி மாலை

யுவரங்கர் தமிழில் மிக்க பயிற்சியை உடையவர். உடையார் பாளையத் திற்கோயில் கொண்டெழுந்தருளியுள்ள நறுமலர்ப்பூங்குழல் நாயகி மீது அவர் இயற்றியதாக ஒரு மாலை வழங்குகின்றது. நெடுங்காலம் புத்திர பாக்கியமில்லாமையால் அவர் வருந்தினாரென்பது அம்மாலையிலுள்ள,


(கட்டளைக்கலித்துறை)
"நீமட்டும் நன்மணியாகிய மக்கள் கண் நேயம் வைத்தாய்
யாமட்டும் புத்திரனில்லா திருப்பதழகதுவோ
சாமட்டு மேதுயர் வாரியின் மூழ்குதல் தன்மமதோ
நாமட்டு றாச்சீர் நறுமலர்ப்பூங்குழல் நாயகியே"


என்னும் செய்யுளால் தெரியவருகிறது.

அம்மாலை முப்பத்திரண்டு செய்யுட்களை உடையது; எளிய நடையில் அமைந்தது. அதிலுள்ள இரண்டு செய்யுட்கள் வருமாறு;

"கன்றோடப் பார்க்குங்கொலோகற வைப்பசு கைக்குழவி
சென்றோடப் பார்ப்பள் கொலோபெற்ற மாது திருக்கண்வைத்தே
என்றோடம் நீக்கி யினிமை செயாமலிருப்பதுவும்
நன்றோ வுனக்கு நறுமலர்ப்பூங்குழல் நாயகியே."


"தனந்தரு வாய் கல்வி கற்கும் அறிவொடு சந்தமிகு
மனந்தருவாய் நின்னைப் போற்றுந் தகைக்குவண் சாதுசங்க
இனந்தருவாய் நின்றிரு நோக்கம் வைக்க விலங்குறுமா
னனந்தருவாய் நன்னறுமலர்ப்பூங்குழல் நாயகியே."

(இலங்குறும் ஆனனம்: ஆனனம்-முகம்)

புலவர்கள் இயற்றிய செய்யுட்கள்

தமிழ் வித்துவான்களிடம் யுவரங்கருக்கு இருந்த அபிமானம் அவர்பால் பல வித்துவான்களை வரச் செய்தது. அவருக்குத் தமிழ்ப்பயிற்சி இருந்த மையின் உண்மைப் புலமையை அறிந்து உவக்கும் திறம் நன்றாக அமைந்திருந்தது. பெயரளவில் தமிழ்ப்புலவர்களாக வந்து எதையாவது பாடிவிட்டு அவர்பால் ஸம்மானம் பெற்றுச் செல்லமுடியா தென்பதை யாவரும் நன்கு அறிந்திருந்தார்கள். அதனால் யுவரங்கர்பாற் சென்றால் தங்களுடைய உண்மை ஆற்றல் புலப்படுமென்றும் கல்வியறிவில்லாத வர்களோடு ஒருங்கு வைத்து எண்ணும் அபாக்கியம் தங்களுக்கு நேராதென்றும் எண்ணிப் பல தமிழ்ப்புலவர்கள் வந்து வந்து பல நாள் இருந்து வாயாரப் புகழ்ந்து ஸம்மானம் பெற்று மனங்குளிர்ந்து செல் வார்கள். அத்தகையவர்கள் பாடிய செய்யுட்கள் எத்தனையோ பல இருந்திருத்தல் கூடும். இப்பொழுது சில பாடல்களே கிடைக்கின்றன.

யுவரங்கர் தம்பால் வந்த தமிழ்ப்புலவர் ஒருவரைக் கொண்டு கொன்றை வேந்தனில் உள்ள ஒவ்வொரு நீதிவாக்கியத்தையும் ஒவ்வொரு விருத் தத்தின் இறுதியில் அமைத்து ஒரு நூல் செய்யும்படி கேட்டுக் கொண்டார். அவர் அங்ஙனமே செய்து அரங்கேற்றினார். தக்க பரிசில்கள் அவருக்கு வழங்கப்பட்டன். அந்நூல் இப்பொழுது கிடைக்கவில்லை.1

ஒரு காலத்தில் உடையார் பாளையத்தைச் சார்ந்த இடங்களில் பஞ்சம் உண்டாயிற்று. அக்காலத்தில் யுவரங்கர் உடையார்பாளையத்திற்கு வந்த யாவருக்கும் அன்னமளித்துப் பாதுகாத்தார். அதனைப் பாராட்டிப் பலர் பல செய்யுட்கள் பாடியுள்ளார். அவற்றுள் ஒன்று வருமாறு:

(விருத்தம்)

"கன்னன் கொடுத்த பசுக்கிடையும்
கடவுள் கொடுத்த திருவோடும்
தென்னன் கொடுத்த மணிவீடும்
சேரன் கொடுத்த பொன்னாடும்
மன்னன் கச்சி யுவரங்கன்
வாவாவென்று பஞ்சத்தில்
அன்னங்கொடுத்த கொடைக்கு நிகர்
அன்றாம் என்றும் இல்லையே."


(பசுக்கிடை-பசு மந்தை)

வேறொரு சமயத்தில் ஒரு வித்துவான் தமக்குக் கலியாணம் செய்து கொள்ளப் பொருளுதவி செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டு பின் வரும் செய்யுளைச் சொன்னார்:
(கட்டளைக் கலித்துறை)
"தேமிக்க வின்றுணை கொண்டோர் கனியைச் செறிவதற்கா
நாமொய்த்த தண்பொழில் சுற்றின மித்துணை நாட்கள் மனம்
காமித்த வக்கனி யிந்நாளடையக் கருணைசெய்வாய்
தாமத் தடந்தோள் யுவரங்கனென்னுந் தருவரசே."


(கனியை- கன்னிகையை; பழத்தை என்பது வேறு பொருள். பொழில்-பூமி; சோலையென்பது வேறு பொருள். தருவரசு- கற்பகம்)

தமிழ்ப்புலவர்கள் அவ்வப்பொழுது யுவரங்கர் மீது பாடிய செய்யுட்களிற் சில வருமாறு:-

(வெண்பா)
1. "கச்சி யுவரங்கன் காவேரி அந்தரங்கன்
இச்சகத்திலென்றும் இரண்டரங்கர்- மெச்சுறவே
இந்தரங்கன் யாவரையும் ரட்சிப்பானென்றெண்ணி
அந்தரங்கன் கண்ணுறங்கினான்."
(அந்தரங்கனென்றது ஸ்ரீரங்கநாதரை)

(விருத்தம்)
2. "சந்திரன் வீ சங்குமணனரைக் காற்றாதா
சவிதாவின் கான்முளையே காற்றாதாவாம்
இந்தெனும் வாணுதலாடன் பாகத்தெம்மான்
ஈசனுமே யரைத்தாதா வென்னலாகும்
வந்திரக்கு முகுந்தனுக்கீ முக்காற்றாதா
மாவலியே யெனப் பெரியோர் வழங்குவார்கள்
இந்திரனாங் கச்சியுவரங்க மன்னன்
என்று முழுத் தாதாவென்றியம்பலாமே."


இந்தச் செய்யுள் மிக அருமையானது. சந்திரன் முதலியவர்கள் முழுத் தாதா அல்லரென்றும், யுவரங்கரே முழுத்தாதா வென்றும் இதில் சொல்லப்பட்டிருத்தல் அறிந்து இன்புறத் தக்கது. பதினாறு கலைகளில் ஒவ்வொன்றையே ஒவ்வொருநாளும் சூரியனுக்குக் கொடுப்பதனால் சந்திரன் வீசம் தாதாவானான். குமணன் தன் உடம்பில் எட்டில் ஒரு பங்காகிய தலையை அளிக்க முன்வந்தமையின் அரைக்கால் தாதா வானான். சவிதாவின் நான்முளை யென்றது கர்ணனை (சவிதா-சூரியன்); அவன் நாள்தோறும் பகலிற் பதினைந்து நாழிகையளவே தானம் பண்ணி வந்தான்; ஒரு நாளின் காற்பாகத்தில் அங்ஙனம் செய்த தனால் அவன் கால்தாதாவானான். சிவபிரான் தம் திருமேனியிற் பாதியை உமாதேவியார்க்கு அளித்தமையால் அவர் அரைத்தாதா வானார். மூன்று காலால் அளக்கப் படுவனவற்றை வழங்கினமையால் மாவலி முக்கால் தாதாவானான்.
3. வரைகளிலே பெரியவரை மகாமேருவரையென்று வர்ணிப்பார்கள்
தரைகளிலே பெரிய தரை தென்சோழமண்டலமாச் சாற்றுவார்கள்
உரைகளிலே பெரியவுரை கம்பராமாயணத்தின் உரையதாகும்
துரைகளிலே பெரியதுரை கச்சியுவரங்கனெனச் சொல்லலாமே."

ஸங்கீத வித்துவான்கள்.

யுவரங்கர் ஸங்கீத வித்துவான்கள் பலரை ஆதரித்து வந்தனர். வழக்கம் போல் ஸங்கீத வித்துவான்கள் தங்களுக்கு அமைத்த இடங்க ளில் தங்கி உபசாரங்களைப் பெற்று மகிழ்ந்து உள்ளக் கிளர்ச்சியோடு தங்களுடன் இருப்பவர்களிடம் பாடிக்கொண்டே இருப்பார்கள். அத்தகைய சமயங் களை ஒற்றர்கள் மூலம் அறிந்து யுவரங்கர் அங்கே சென்று திரை மறைவிலிருந்து கேட்டு இன்புறுவார். அவர்கள் மனங்கனிந்து தாங்களே பாடுவது மிக்க இனிமையுடையதாக இருக்குமென்பது அவருடைய கருத்து.

தஞ்சை ஸம்ஸ்தான ஸங்கீத வித்துவான்களுள் ஒருவராகிய நாராயணசாமி ஐயர் என்பவர் யுவரங்கர்பால் ஒருமுறை வந்தார். தஞ்சையில் உயர்ந்த மதிப்பை அடைந்தவர் அவர். உடையார்பாளையம் வந்த அவருக்கு வழக்கப்படி இருப்பிடம் அளித்துப் பலவகை உபசாரங் கள் செய்யப் பட்டன. ஒருநாள் அவருக்கு அங்கே நியமிக்கப்பட்டி ருந்த வேலைக்காரன் தைலம் தேய்க்கத் தொடங்கினான். ஒரு பலகையின் மேல் அவரை இருக்கச் செய்து மிக உயர்ந்த சந்தனாதித் தைலத்தைத் தலையில் சேர்த்துத் தாளம் போட்டுத் தேய்த்து வந்தான். அதுவரை யில் எங்கும் பெறாமல் அங்கே பெற்ற உணவு வகைகளாலும் உபசாரங் ளாலும் இயல்பாகவே அவருக்கு இருந்த சந்தோஷத்திற்கு அளவில்லை. பின்பு தைலத்தினால் உண்டான குளிர்ச்சியும் தேய்த்த வன் போட்ட தாளமும் அவருடைய மகிழ்ச்சியைத் தூண்டி விட்டன. தம்மையே மறந்து அவர் பாடத் தொடங்கினார். அவருக்கு உண்டான சந்தோஷத்தால் பாட்டு வரவர மேம்பட்டு இனிமை உற்றது; அந்த ஸங்கீதம் அவருக்கே வியப்பை உண்டாக்கியது. அப்பொழுது யுவரங்க ருடைய ஞாபகம் அவருக்கு வந்தது; "அடடா! இந்தப் பாட்டை யுவ ரங்கர் கேட்பதற்கு இல்லையே' என்று வருந்திச் சொன்னார். "இதோ கேட்டு ஆநந்தக்கடலில் ஆழ்ந்துகொண்டிருக்கிறேன்." என்று ஒரு சப்தம் வந்தது; அங்கே யுவரங்கர் ஒரு திரை மறைவிலிருந்து அந்தக் கனிந்த இசையமுதத்தைப் பருகிக்கொண்டிருந்தார்.


நாராயணசாமி ஐயர் திடுக்கிட்டு எழுந்தார். அருகிலிருந்த வேலைக் காரன் அவருடைய குறிப்பை அறிந்து ஒரு ரவை சல்லாத்துணியால் தலையிலிருந்த தைலத்தைத் துடைத்தான். நாராயணசாமி ஐயர் வஸ்திரம் முதலியவற்றை நன்றாக அணிந்துகொண்டார். யுவரங்கரும் அருகில் வந்து அமர்ந்தார்; மறுபடியும் வித்துவான் பாட ஆரம்பித்தார்; அவருடைய முழுவன்மையும் அன்று வெளியாயிற்று. பல கீர்த்தனங் களை அவர் பாடினார்; கடைசியில் மங்களம் பாடி நிறுத்தியவுடன் அவருடைய பார்வை அங்கே வேறொரு பக்கத்திற் சென்றது. அதனை யறிந்த யுவரங்கர், "என்ன விசேஷம்?" என்று கேட்டார். "அந்தப் பக்கத்தில் ஒரு சந்திரன் உதயமாயிற்று; அதைத் தான் பார்த்தேன்." என்று வித்துவான் கூறினார்.

அவர் பாடிக்கொண்டே இருக்கும்பொழுது அதனை அறிந்த யுவரங்கருடைய அரண்மனையில் இருந்தவளும் இசைப்பயிற்சி மிக்கவளுமாகிய தாஸி ஒருத்தி அப் பாட்டைக் கேட்க விரும்பி அங்கே வந்து, ஒரு திரை மறைவில் இருந்து கேட்டு வந்தாள். பாட்டு நின்றவுடன், "இவ்வளவு நன்றாகப் பாடும் மகாபுருஷனுடைய திருமுகத்தைப் பார்க்கவேண்டும்" என்று எண்ணித் திரையிலிருந்து எட்டிப் பார்த்தாள். அதே சமயத்தில் நாராயணசாமி ஐயர் அவள் முகத்தைப் பார்த்துவிட்டார். அந்த இடத்தில் பெண்பால் வந்தது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. சந்திரனென்று கூறியது அவள் முகத்தைத்தான்.
நாராயணசாமி ஐயர் கூறியதைக் கேட்ட யுவரங்கர் அந்தத் தாஸியை வரவழைத்து அவளைப் பார்த்து, "இவர்தாம் இனி உனக்கு நாயகர். இவருக்குரிய கைங்கரியங்களை இவன் மனம் கோணாமல் செய்து மகிழ்ந்திரு; நீ மிக்க பாக்யசாலி" என்று சொல்லி விட்டு, "தாங்கள் இவளை ஏற்றுக்கொள்ளவேண்டும்" என்று விநயமாக ஸங்கீத வித்துவானிடம் தெரிவித்தார். அவருக்கு இன்னது செய்வதென்று தோன்ற வில்லை. அவர் மறுத்தற்கு அஞ்சி அவளை அங்கீகரித்துக்கொண்டார். பின்பு யுவரங்கர் அவருக்குப் பலவகை ஸம்மானங்களும் அவளுடைய பாதுகாப்பிற்காகத் தனியாகப் பொருளுதவியும் செய்தார்; அன்றியும் அவருக்கு, "பூலோக கந்தர்வர்" என்னும் பட்டத்தையும் அளித்தார். அது முதல் அவர் பெயர் பூலோக கந்தர்வ நாராயணசாமி ஐயர் என்று வழங்கி வரலாயிற்று. வித்துவான்களுடைய மனத்தை மகிழ்விப்பதில் யுவரங்கருக்கு ஒப்பாக வேறு யாரைச் சொல்லமுடியும் ?


தஞ்சாவூர் ஸமஸ்தான வித்துவான்களிற் பலர் யுவரங்கரிடம் வந்து இவ்வாறே தங்கள் ஆற்றலைக் காட்டிப் பரிசு பெற்று இன்புற்றுச் சென்றனர்; மைஸூர், திருவநந்தபுரம் முதலிய ஸம்ஸ்தானங்களிலி ருந்தும் பலர் வந்து சென்றனர்.


பூலோக கந்தர்வ நாராயணசாமி ஐயருடைய ஆசிரியர், 'விரிபோணி' வர்ணமென்று வழங்கும் பைரவி வர்ணத்தை இயற்றிய பச்சைமிரியன் ஆதிப்பையர் என்பவர். அவர் தஞ்சாவூர் ஸம்ஸ்தான வித்துவான்; சிறந்த கர்நாடக ஸங்கீத வித்துவான்கள் பலருக்கு ஆசிரியர்; ஸம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மகாராஷ்டிரம் என்னும் பாஷைகளிற் பல கீர்த்தனங்களை இயற்றியிருக்கிறார்.

யுவரங்கருடைய விருப்பத்தின்படி உடையார்பாளையத்துக்கு ஒருமுறை அவர் வந்தார்; அவருடைய ஞான விசேடத்தில் ஈடுபட்டுச் சிலநாட்கள் இருந்து அவர்மீது பல கீர்த்தனங்களை இயற்றினார். ஆதிப்பையர் அங்ஙனம் இயற்றிய கீர்த்தனங்களுள் நாட்டைக்குறிஞ்சி, சஹானா என்னும் இரண்டு இராகங்களில் உள்ள இரண்டு கீர்த்த னங்களைப் பிற்காலத்தில் அவருடைய பரம்பரையினராகிய புதுக்கோட்டை வீணை சுப்பையர் என்னும் ஸங்கீத வித்துவான் பாடக் கேட்டிருக்கிறேன். சிலநாட்கள் ஆதிப் பையர் உடையார்பாளையத்தில் இருந்து பலவகை உபசாரங்களைப் பெற்று மகிழ்ந்து யுவரங்கர் வழங்கிய பல ஸம்மானங்களையும் பெற்றுச் சென்றார். பின்பும் அடிக்கடி உடையார்பாளையம் வந்து யுவரங்கரை மகிழ்வித்துத் தாமும் மகிழ்ந்து செல்வது வழக்கம்.

அறச் செயல்கள்


யுவரங்கர் தெய்வபக்தியிற் சிறந்தவர். எல்லா மதத்தினர் பாலும் அன்பு பூண்டவர்; சமரச நோக்குடையவர். அவர் சிவவிஷ்ணு ஆலயங்களில் பலவகைத் திருப்பணி களைச் செய்திருக்கிறார்; உடையார்பாளையம், ஜெயங்கொண்ட சோழபுரம், கங்கை கொண்ட சோழபுரம் முதலிய தலங்களில் உள்ள சிவபெருமான் ஆலயங்களில் பல மண்டபங்களைப் புதுப்பித்தார்; புதிய திருப்பணிகளையும் செய்தனர்; அந்த ஸ்தலங் களிலும் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபூவராகப்பெருமாள் கோவிலிலும் நித்திய நைமித்திகங்கள் விதிப்படியே நடைபெறும்படி செய்வித்தார்; பல இடங்களில் அக்கிரஹாரங்களை அமைத்துப் பிராம்மணர்களுக்கு ஸர்வமானியங்களுடன் வீடுகளைத் தானம் செய்தனர்.

நல்லப்ப உடையார்

யுவரங்கருக்குப் பின்பு அவருடைய தம்பியாகிய நல்லப்ப உடையாரென்பவர் ஜமீன் ஆட்சியைப் பெற்றார். அவர் காலத்தில் அவருடைய அன்னையார் ஹிரண்ய கர்ப்ப மகாதானம் ஒன்று செய்தார். அந்த ஜமீன்தாரும் பலவகை ஆலய திருப்பணிகள் செய்தனர். அவருடை அறச் செயல்களையும் புகழையும் புலப்படுத்தி ஒரு புலவர் அவர் மீது பாடிய சிந்து ஒன்று உண்டென்பர். அவர் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்குப் பலவகையான உதவி புரிந்தார். நவாப்பிற்கும் பல ஸமயங்களில் உதவியாக இருந்தனர். அவ்விருவகையாராலும் அவர் பெற்ற ஊதியங்கள் பல.
நல்லப்ப உடையாருக்குப் பின்பு முத்துவிஜயரங்கப்ப உடையாரென்பவரும், அபிநவ யுவரங்கப்ப உடையாரென்பவரும் முறையே ஜமீன்தார்களாக விளங்கினர். பின்ன வருடைய காலத்தில் நவாப்புடைய தலைமை மாறி ஆங்கில அரசின் தலைமை உடையார்பாளைய ஜமீனுக்கும் வேறிடங்களுக்கும் அமைந்தது.

கச்சி ரங்கப்ப உடையார்

பின்பு 1801-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் முதல் தேதி கச்சிரங்கப்ப உடையார் என்பவர் ஜமீன்தாரானார். 1835-ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் வரையில் அவருடைய ஆட்சி நடைபெற்றது.
அவர் தமிழ்ப்பயிற்சியும் ஸங்கீதத்தில் சிறந்த ஆற்றலும் உடையவர். கல்லாடத்தில் ஈடுபட்டுப் பலமுறை படித்தும் புலவர்கள் அதிலுள்ள நயங்களை எடுத்துக் காட்டக் கேட்டும் இன்புற்றார்; மற்ற நூல்களையும் பயின்றார். காவிரியின் தென்பாலுள்ளதும் தேவாரம் பெற்றதுமாகிய திருப்பராய்த்துறை என்னும் தலத்தில் கோடைக்காலத்தில் சிலமாதம் இருந்து வருதல் அவருக்கு வழக்கம்.
ஒரு வருஷம் அங்கே சென்றிருந்தபொழுது தஞ்சாவூரிலிருந்து வீணை பெருமாளை யரென்னும் ஒரு சிறந்த ஸங்கீத வித்துவான் வந்தார். அவர் மேற்கூறிய ஆதிப்பைய ருடைய சிஷ்யர்களில் ஒருவர். வீணை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆற்றலை யாவரும் புகழ்ந்து வந்தனர்.
அவர் கச்சிரங்கர் பால் வந்தபொழுது பல ஸங்கீதவித்துவான்களும் தமிழ் வடமொழி வித்துவான்களும் ஜமீன்தாருடன் இருந்தனர். பெருமாளையர் அவருடைய ஸபையில் வீணை வாசித்தார். அது மிகவும் இனிமையாக இருந்தது. ஸங்கீதத்தில் வல்லவராகிய ஜமீன்தார் எதனையும் திடீரென்று பாராட்டுவதும் அவமதிப்பதுமாகிய இயல்பு இல்லாதவர். ஆதலின் வீணை வித்துவான் எவ்வளவோ இனிமையாகப் பாடியும், வாசித்தும் ஜமீன்தார் பாராட்டவில்லை; சிரக்கம்பமும் கரக்கம்பமும் செய்ய வேயில்லை. உடன் இருக்கும் வித்துவான்கள் தலைவர் எங்ஙனம் நடக்கிறாரோ அதனைப் பின்பற்றுவது தான் உசிதமாதலின் அசைவற்று இருந்தார்கள். வல்லவர் களும் அறிவு மிக்கவரும் ஸபையில் இருக்கும்பொழுது தாமாக இடமறியாமல் தலையை ஆட்டுவதும் கை கொட்டுவதும் சபாஷென்பதும் ஆகிய வழக்கங்களை உடையவர்களை அத்தகைய ஸபைகளிற் காணுதல் அரிது. மூன்று நாட்கள் பெருமாளையர் வீணை வாசித்தார்; பாடிக்கொண்டே வாசிப்பது அவர் வழக்கம்; பல ராகங்கள், கீர்த்தனங்கள், பல்லவி, ஸ்வரங்கள் முதலிய பல வழிகளில் அவர் தம் ஆற்றலைக் காட்டிக்கொண்டே வந்தார். மூன்று நாட்களிலும் ஜமீன்தார் சற்றும் தலை அசைக்கவேயில்லை. மூன்றாவது நாள் வாசித்து வரும்பொழுது பெருமாளை யருக்கு மனவருத்தம் உண்டாயிற்று. அவ்வருத்தத்தால், பாடிவந்த இராகத்துக்கு உரிய ஒரு ஸ்வரஸ்தானம் தவறியது. அதனை யாரும் கவனிக்கவில்லை. அந்த ஸமயத்தில் 'பேஷ்' என்று ஜமீன்தார் சொன்னார்.

பெருமாளையர் திடுக்கிட்டார்; உடனே வீணையைக் கீழே வைத்தார். "ஏன்? மேலே வாசிக்கலாமே" என்று ஜமீன்தார் சொன்னார். "எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்ற வில்லை. இந்த மூன்று நாட்களும் என்னுடைய சக்தியை யெல்லாம் காட்டி வாசித்தேன்; கல்லுங்கரையும் வண்ணம் பாடினேன். அப்பொழுதெல்லாம் துரைய வர்கள் சந்தோஷிக்கவில்லை. இப்பொழுது கொஞ்சம் தவறிவிட்டது. இந்த ஸமயத் தில் நீங்கள் சந்தோஷித்தீர்களே!" என்று வித்துவான் கூறினார். உடையார், "என் ஞானத்தைக் காட்டுவதற்குத்தான் சந்தோஷித்தேன். அன்றி இவ்வளவு நாளும் கூர்ந்து கவனித்து வந்தேனென்பதையும் இதனாலேயே நீங்கள் அறிந்து கொள்ளலாம். அநாவ சியமாக மனவருத்தத்தைக் கொடுத்ததற்கு க்ஷமிக்கவேண்டும்" என்று சொல்லிப் பாராட்டிப் பரிசுகள் வழங்கினார். வித்துவானும் அவருடைய ஞானத்தை அறிந்து பாராட்டினார்.

அந்த ஜமீன்தார் பெரிய திருக்குன்றம் கனம் கிருஷ்ணையருடைய பெருமையை அறிந்து தம்மிடத்துக்கு வரவழைத்து ஸமஸ்தான வித்துவானாக நியமித்துக் கொண்டார். அவர் மீது கனம் கிருஷ்ணையர் பாடிய சில கீர்த்தனங்கலும் சில பாடல்களும் உண்டு; அவற்றுள் ஒரு கட்டளைக்கலித்துறையின் ஒரு பகுதியாகிய, "கச்சிரங்கேந்த்ரன் சிரக்கம்பம் போதும்" என்பது மட்டும் ஞாபகம் இருக்கிறது. கச்சி ரங்கர் காலத்தில் திருப்புறம்பயம் வீர சைவராகிய பாலசரஸ்வதி சுப்பிரமணியக் கவி ராயரென்பவரும் சாருவாய் குமாரசாமிக்கவிராயரென்பவரும் ஸமஸ்தான வித்து வான்களாக இருந்தனர். திருவாவடுதுறையில் ஆதீன வித்துவானாக இருந்த கந்த சாமிக் கவிராயரென்பவர் உடையார்பாளையம் வந்து கச்சிரங்கரைப் பாராட்டி ஒரு கோவை பாடி அதற்காக மானியங்களைப் பெற்றார். அக்கோவையிலுள்ள ஒரு செய்யுள் வருமாறு:

(இறையோன் இருட்குறி வேண்டல்)

(கட்டளைக்கலித்துறை)

திருந்தார் கலிபுகுந்தேமீன்வரச்செய்து செங்கதிரோன்
விருந்தாகவேயெமைவிட்டான் தமிழுக்கு மிக்க நிதி
தருந்தாரு வாங்கச்சி ரங்க மகீபன் றடஞ்சிலம்பில்
கருந்தாழ் மழைக்குழலீருமக் கேயின்று காண்மின்களே."
கச்சிரங்கதுரை மீது வேறொரு புலவர் பிள்ளைத்தமிழொன்று பாடியுள்ளாரென்பர். அவர் விஷயமாக உள்ள தனிப்பாடல்கள் பல. அவற்றுள் பாலசரஸ்வதி சுப்பிரமணியக் கவிராயர் பாடிய செய்யுட்களில் ஒன்று வருமாறு:

(வெண்பா)
"கல்லாடமேமுதலாக்கற்றுணர்ந்தாய் கல்வி பெற்றோர்
பல்லாடக் கூடுமோ பார்வேந்தே-சொல்லாடும்
கச்சிரங்க சாமியெனும் காலாட்கள் தோழாநீ
வச்சிரதே கம் பெற்று வாழ்."

கச்சிரங்கப்ப உடையாருக்குப் பின்பு முத்துவிஜயரங்கப்ப உடையார், ரங்கப்ப உடையார் என்பவர்கள் முறையே ஜமீன்தார்கள் ஆனார்கள்.

கச்சிக் கல்யாணரங்கர்

அவர்களுக்குப் பின்பு கச்சிக் கல்யாணரங்கரென்பவர் ஜமீன்தாரானார். 1842-ம் வருஷம் ஜூலை மாதம் முதல் 1885-ஆம் வருஷம் ஜூன் மாதம் வரையில் அவர் ஜமீன் ஆட்சியை நடத்தினார். அவரும் வித்துவான்களிடத்திற் பிரியமும் தர்மங்கள் செய்வதில் விருப்பமும் உடையவராக இருந்தார்.

அந்த ஜமீன்தார், கனம் கிருஷ்ணையரிடத்தில் மிக்க நட்புரிமை பாராட்டிப் பழகிவந்தார். அவருக்கு ஜமீன்தார், பல்லக்கும் குதிரையும் கொடுத்து அவ்வப்பொழுது வேண்டிய பொருளையும் அளித்துக் கெளரவித்து வந்தார். கனம் கிருஷ்ணையர் அந்த ஜமீன்தார் மீது பாடிய கீர்த்தனங்கள் பல. அவர் முதுமையினாலும் ஒருவகைப் பிணியினாலும் தேகத் தளர்ச்சியை அடைந்து தம்முடைய ஊருக்குப் போய் இருக்கவேண்டுமென்று எண்ணித் தம் விருப்பத்தை ஒரு கீர்த்தனத்தால் ஜமீன்தாருக்குப் புலப்படுத்தினார். அதனைக் கேட்ட ஜமீன்தார் அங்ஙனமே போய் இருப்ப தற்கு வேண்டியவாறு பொருளுதவி செய்து அனுப்பி னார்; பின்பும் கவலையில்லாமல் அவரைப் பாதுகாத்து வந்தார். கனம் கிருஷ்ணையருக்குப் பின்பு தாளப் பிரஸ்தாரம் சாமா சாஸ்திரிகளென்னும் பிரபல ஸங்கீத வித்துவானுடைய தாயாதியாகிய சுப்பராய ரென்பவரையும், அவருக்குப் பின்பு அந்த மரபினராகிய அண்ணாசாமி ஐயர் என்பவரையும் ஆஸ்தான வித்து வான்களாக நியமித்துக் கல்யாண ரங்கர் ஆதரித்து வந்தனர். அக்காலத்தில் பாலசரஸ்வதி சுப்பிரமணியக் கவிராயரும் இருந்தார்.

கல்யாணரங்கர் செய்த நற்செயல்கள் பல. உடையார் பாளையம், மதனத்தூர், ஆநந்தவாடி என்னும் இடங்க ளில் அவர் அன்ன சத்திரம் கட்டுவித்தார். கொள்ளிடக் கரையிலுள்ள மதனத்தூர்ச் சத்திரத்தைக் கட்டிய காலத்தில் அதனைப் பாராட்டிக் கனம் கிருஷ்ணையர் பாடிய கீர்த்தனம் ஒன்று உண்டு. பாலசரஸ்வதி சுப்பிரமணியக் கவிராயர் அப்பொழுது பாடிய செய்யுள் வருமாறு:
"திருமால் மண் உண்ணாமல் சிவனும் நஞ்சைத்
தினாமல் செங்கமலப் பொகுட்டு வேதன்
உருமாறி யன்னமெனப் பறந்திடாமல்
உயர்மறையோர் வடிவின் வந்தே யன்ன முண்ணக்
க்ருமால்நேர் காதலக் கல்யாணரங்கக்
காலாட்கள் தோழமன்னர் கருத்து வந்தே
வருமாம தனத்தூரில் அன்ன சத்ரம்
வைத்திட்டாரெவரும் வந்து துய்த்திட்டாரே."


தத்தனூரில் பலவகைக் கனிவிருக்ஷங்களும் பூஞ்செடிகளும் நிறைந்து கண்ணுக்கு இனிதாக விளங்கும் பூஞ்சோலையொன்றைக் கச்சிக் கல்யாணரங்கர் அமைத்தார். அதனைப் பாராட்டித் தர்பார் இராகத்தில் கனம் கிருஷ்ணையர் ஒரு கீர்த்தனம் பாடியிருக்கிறார். கல்யாணரங்கதுரை ஸ்ரீமுஷ்ணம் பெஉர்மாளுக்கும், சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கும் தங்கக் கவசமும் சிதம்பரம் ஸ்ரீமூலட்டானேஸ்வரருக்கு ஸஹஸ்ரதாரா பாத்திரமும் செய்தளித்தார்; கும்பகோணம் ஸ்ரீசங்கராசாரியார் மடத்திற்குத் தேவமங்கலமென்னும் கிராமத்தில் 40 காணிநிலங்களை ஸர்வமானியமாக வழங்கினார்.

அவருடைய காலத்தில் கனம் கிருஷ்ணையர் பால் என் தந்தையாராகிய வேங்கட ஸுப்பையர் பன்னிரண்டு வருஷம் உடனிருந்து பணிவிடை செய்துவந்து ஸங்கீத அப்யாஸம் செய்தனர். அவரிடம் ஜமீன்தாருக்கு மிக்க பிரியம் உண்டு. என் தந்தையாருடைய தாயாருக்கும் கனம் கிருஷ்ணையர் அம்மான் ஆகவேண்டும். கச்சிக் கல்யாணரங்க துரையினுடைய பலவகை இயல்புகளையும் அவர் முன்னோர்களுடைய வரலாறு களையும் என் தந்தையார் அடிக்கடி எனக்குக் கூறியிருக்கின்றனர். மாதச் சம்பளம் கொடுத்து அவரை ஸமஸ்தான ஸங்கீத வித்துவானாக அந்த ஜமீன்தார் இருக்கச் செய்து சில வருடங்கள் ஆதரித்து வந்தார். கனம் கிருஷ்ணையரின் விருப்பப் படி என் தந்தையாருக்குப் பொருளுதவி செய்து திருமணம் செய்வித் தவர் அந்த ஜமீன்தாரே.


கல்யாணரங்கருக்குப் பின்பு கச்சி யுவரங்கப்ப உடையார், 1918-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் வரையில் ஜமீன்தாராக இருந்து புகழ் பெற்றார். பின்பு அவருடைய செல்வக் குமாரர்களும் உபகார சிந்தையுடைய வர்களும் ஆகிய மகாஸ்ரீ கச்சிச் சின்னநல்லப்ப காலாட்கள் தோழ உடையாரவர்கள் ஜமீன் தலைமையை வகித்துத் தம் முன்னோர்கள் ஒழுகிய வழியைப் பின்பற்றி நற்செயலும் நல்லறமும் புரிந்து விளங்கி வருகிறார்கள்.
உடையார்பாளையம் அரண்மனையிலிருந்து கிடைத்த "உடையார்பாளையம் ஜமீன் சரித்திரம்", "பயறணீச்சுரத் தலபுராணம்," "தனிப்பாடல்கள்", முதலியவற்றிலுள்ள செய்திகளையும் இளமை தொடங்கிப் பெரியோர்கள் பால் நான் கேட்டுவந்த செய்திகளையும் தொகுத்து இவ்வரலாறு எழுதப்பட்டது.
சேவிலுயரம்" எனத் தொடங்கும் இச்செய்யுள் சொக்கநாதப் புலவர் பாடியதாகத் தனிப்பாடற்றிரட்டில் காணப்படுகின்றது.
ஐயனார் மூக்கில் விரல் வைத்தல்- இந்நிகழ்ச்சியைப் பிறரோடு தொடர்பு படுத்திச் சொல்வதும் உண்டு.

அஜ்ஞாநாமவநீபு4ஜாமஹரஹஸ்ஸ்வர்ணாபி4ஷேகாத3பி-
ஞ்ஜாத: ஸ்ரீயுவரங்க3பூ4பதிமணே: ச்லாகை4வ ஸம்மாநநா |
ஸாராஸாரவிவேகசூந்யதருணீ ஸம்போ4க3 ஸாம்ராஜ்யாத:
ஸாரஜ்ஞேந்து3முகீ2விலோகநஸமுத்கண்டை2வயூநாம்முதே3 ||


கொன்றைவேந்தனை வைத்து எழுதப் பட்ட நீதி நூல் 

1. இச்செய்தியைச் சொன்னவர், இளமையில் எனக்குச் சுரிகை முதலியவற்றைக் கற்பித்த செங்கணம் விருத்தாசல ரெட்டியாரென்பவர்.

Tuesday, March 6, 2012

பல்லவ மன்னன் ஐயடிகள் காடவர்(வன்னிய) கோன் நாயனார் வரலாறு







ஐயடிகள் காடவர்கோன் நாயனார் வரலாறு


திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர்
வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்
பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.
இத்திருமுறையில் ஐந்தாவது பிரபந்தமாகிய சேத்திரத் திருவெண்பாவை அருளியவர் ஐயடிகள் காடவர்கோன் நாயனார். இவர் திருத்தொண்டத் தொகையில் சுந்தரரால் `ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்` எனப் போற்றப் பெறுபவராவார். சேக்கிழார் பெரிய புராணத்தில் இந்நாயனாரின் வரலாற்றை விளங்க விரித்துரைத்துள்ளார்.

பெயர் விளக்கம்

காடவர் என்பது பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூஉ வாகும்.ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும்.

ஆட்சிச் சிறப்பு

ஐயடிகள் உலகில் புகழ் நிலவ அரசு புரிந்த பல்லவர் குலத்தில் தோன்றினார். நாட்டில் வறுமையும் பகையும் குடிகளை வருத்தா வண்ணம் நீதிநெறியோடு ஆட்சி புரிந்தார். சிவநெறியைப் போற்றி வளர்த்தார்.

திருமலியும் புகழ்விளங்கச் சேணிலத்தில் எவ்வுயிரும் பெருமையுடன் இனிதமரப் பிறபுலங்கள் அடிப்படுத்துத்
தருமநெறி தழைத்தோங்கத் தாரணிமேல் சைவமுடன்
அருமறையின் துறைவிளங்க அரசளிக்கும் அந்நாளில்
என இம்மன்னரது பெருவீரத்தையும் சிவநெறிப் பற்றையும் சேக்கிழார் விளக்கியுள்ளார்.

துறவுள்ளம்

மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம் மாமன்னர் அரசுரிமை தன் சிவனடித் தொண்டுக்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துத் தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவ தலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப் பாடினார். அவ்வெண்பாக்களில் இருபத்து நான்கு பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப் பெறுகிறது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் விளங்கக் காணலாம்.

இவ்வாறு ஐயடிகள் செந்தமிழால் சிவ நெறி போற்றியும் தமக்கு இயைந்த ஆலயத் திருப்பணிகள் ஆற்றியும் வாழ்ந்து முடிவில் சிவலோகம் எய்திச் சிவபிரான் திருவடிகளை அடைந்தார் என்பது பெரிய புராணம் உணர்த்தும் இந்நாயனார் வரலாறாகும்.

ஐயடிகள் யார்?

இந்நாயனார் பல்லவ மன்னர்களில் யாவர் என்பதையும் இவரது காலத்தையும் பேராசிரியர் திகு. க. வெள்ளை வாரணனார் விரிவாக ஆராய்ந்து தெளிவு செய்துள்ளார்.

சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் `கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்` எனக் குறிப்பிடப்பெறும் மன்னன் காஞ்சியில் கைலாசநாதர் கோயிலைக் கட்டிய இராஜசிம்மப் பல்வனாவான் என்றும் அம்மன்னனது தந்தையாகிய முதலாம் பரமேசுவரவர்மனே ஐயடிகள் காடவர்கோன் ஆவார் எனவும் அவர் தெளிவு செய்துள்ளார்.

முதலாம் பரமேசுவரவர்மன் காலத்தில் பெரும் போர் ஒன்று நிகழ்ந்தது. சாளுக்கிய வேந்தனாகிய இரண்டாம் புலிகேசியின் மகன் விக்கிரமாதித்தன் என்பான் தமிழ் மாநிலத்தைக் கைப்பற்றக் கருதி தமிழகம் வந்து இம் மன்னனோடு பெரும் போர் புரிந்து வென்று பாண்டி நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது பாண்டியன் நெடுமாறன் மகனாகிய கோச்சடையன் என்பானிடம் தோல்வியுற்றுத் திரும்ப நேர்ந்தது. இவ்வேளையில் அவனிடம் தோற்ற பல்லவனாகிய முதலாம் பரமேசுவரவர்மன் தன் படைகளுடன் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள பெருவளநல்லூரில் விக்கிரமாதித்தனோடு போரிட்டு வெற்றி கொண்டான். தோற்ற விக்ரமாதித்தன் ஒரு கந்தையைப் போர்த்திக்கொண்டு தன் நாடு திரும்பினான்.

விக்கிரமாதித்தனைப் பரமேசுவரவர்மன் வெற்றி கொண்டதைக் கைலாசநாதர் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. சேக்கிழார் ஐயடிகள் காடவர்கோனின் பெருவீரத்தைக் குறிப்பிடும் பாடல் இப்போரைக் குறித்ததாகலாம். ஆதலின் அம்மன்னனே ஐயடிகள் என்பதையும் அறியலாம்.

பரமேசுவரவர்மன் கூரம் என்ற ஊருக்குப் பரமேசுவர மங்கலம் எனப் பெயர் சூட்டி அவ்வூரில் விச்சாவிநீத பல்லவ மன்ன பரமேசுவரக்கிருகம் என்ற சிவாலயத்தை முதன் முதல் கற்றளியாகக் கட்டிய பெருமைக்கு உரியவன். மாமல்லபுரத்தில் இவன் பாட்ட னாகிய நரசிம்மவர்மன் காலத்தில் தொடங்கி இம்மன்னனால் முற்று விக்கப்பட்ட ஆலயத்தில் காணும் கல்வெட்டால் இவன் வடமொழி தென்மொழிகளில் வல்லவன் என்பதை உணரலாம்.

இவ்வாறு பெருவீரனாகவும், சிவநெறியாளனாகவும் புலமையாள னாகவும் விளங்கிய பரமேசுவரவர்மன் தன் ஆட்சியைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துவிட்டு, தலங்கள் தோறும் சென்று வழிபட்டு வெண்பா மாலைகளால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்ததால் அவன் மகனாலும் குடிமக்களாலும் இம்மன்னன் `ஐயடிகள்` எனப் போற்றப் பெற்றான் என்று கொள்ளலாம். இவர் காலம் கி.பி. 670 முதல் 685 வரையாகும்.